தனிப்பெருந்துணையே

ராம் , அவள் அணிந்திருந்த  காய்ந்த துணிகளை மடித்து தனது வாழ்நாள் பொக்கிஷங்களோடு சேர்த்து வைக்க , கறுப்பு திரையில் "இயக்கியவர் - பிரேம் குமார்" என காட்சி அளிக்கும் போது உணர்கிறது , நாம் பார்த்து கொண்டிருப்பது படம் என்று

மனதில் மிகுந்த கனத்துடன் திரை அரங்கை விட்டு வெளியே வந்த பல பேரில் ஒருவராய் நான். ராம் , ஜானு என்ற எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்வில் ஒரு நாள் பங்கெடுத்து கொண்டதை போல் ஒரு உணர்வு  .எதோ இரண்டு பேர் அவர்களது வாழ்வில் நடந்த கதையை நம்மிடம் மனம் திறந்து கூறிய ஒரு நிறைவு. அவர்கள் சிரிப்பில் நாம் சிரிக்க ,அவர்கள் பிரிவில் நாம் வாடா ,உணர்ச்சிகளின் எழும்பல் பரவசம் ஊட்டி ஏதோ செய்தது. என்னை என்னடா செய்தீர்கள்? ஒரு திரைப்படத்தை பார்த்து எனக்குள் ஏன் இவ்வளவு பாதிப்பு என புலம்ப வைத்தது 96. பார்த்து விட்டு வந்த உடன் காய்ந்த மண்ணை யாசித்த மழையைப் போல் உணர்ச்சிகளின் தூறல் இதோ

வழி போக்கிக் கொண்டு நிஜங்களின் நிழலை கேமராவில் பிடித்து கொண்டு , இரண்டு மாதம் வெட்டாத ரோமத்துடன் ராம். போகும் வழியில் தான் படித்த பள்ளியில் வாழ்ந்த முன் கால நிஜத்தை தேடுகிறான். அங்கிருந்து பள்ளி நண்பர்களுடன் சந்தித்து , அங்கு தான் தன் வாழ்வில் தொலைத்த காதலை கண்டால் என்ன ஆகும் என ஒரு அடியில் அடிக்கி விட கூடிய கதை தான். எனினும் அசாதாரண சக்தி உண்டு அதற்கு. ஒரு நல்ல கதாசிரியர் தான் படைத்த பாத்திரத்திற்கு அழகு கூட்டி ஆடை அணிவித்து உயிர் கொடுப்பார். அப்படி உயிர் பெற்ற ராம்-ஜானு மூலம் கோடி சிலிர்ப்புகளை கொடுத்த பிரேம் குமாரிற்கும் கோவிந்திற்கும் முத்தங்கள்.



"ஜானகி தேவி" என தாளில் இடது கையில் எழுதுவதை முன் பாதியில் பதித்து பிறகு அதனின் தொடர்ச்சியை அவள் பின் பாதியில் இடது கையில் உண்பதில் காத்தமை ஆகட்டும், ராமின் பொக்கிஷங்களுக்கும் நினைவுகளுக்கும் இருக்கும் ஈர்ப்பை புகைப்பட கலைஞர் என பேரிட்டு ஊட்டுவதாகட்டும் ,பிரேம் நமக்கு மற்றும் ஒரு முறை கதா பாத்திரங்களே கதையின் தேவை என உரக்க சொல்லிருக்கிறார் ."Mind the gap between" , "ராம் ,என்ன விட்டு தூர போய்டியா ?"  என symbolism வைத்து வண்ணம் தீட்டிருக்கிறார்கள். தமிழ் காதல் திரைப்படத்தின் இலக்கணங்களை நொறுக்கும் படி படத்தில் ஒரே ஒரு கட்டி அணைக்கும் காட்சி. அதுவும் ஜானுவின் கனவில் மட்டுமே. கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கூடுவதெல்லாம் அவர்களது மனங்கள் மட்டுமே. காதல் என்பது உடலை தாண்டி ,பணத்தை தாண்டி ,காலத்தை தாண்டி ஓங்கி நிற்கும் அற்புதம் என உணர்த்துகிறது. இன்னும் நிறைய பேசலாம் .பேசினால் படத்தின் முழு சாரத்தை பெறாமல் போக வாய்ப்புண்டு. வேண்டாம்

மொத்தத்தில் ராமும் ஜானுவும் உங்களை குளிர வைப்பார்கள். உங்களை கதறி அழ வைப்பார்கள். உங்களை இன்பமாய் சிரிக்க வைப்பார்கள். உங்களை காதலிக்க வைப்பார்கள். நிலையற்ற வாழ்வில் காதல் மட்டுமே தனிப்பெருந்துணை என சவுக்கடி கொடுத்து வீடு அனுப்பி வைப்பார்கள்


                                                                                                             - ஷ்ரவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"அயி கிரி நந்தினி !"

உரிமை

ரூம் நம்பர் 556