ரூம் நம்பர் 556

 "யோவ்! கார் கதவ சீக்கிரம் மூடுயா! யாராச்சு பாத்துர போறாங்க" என சடசடவென காரை விட்டு இறங்கினர் GKS உம் அவர் டிரைவர் பாண்டியும். மாலை ஏழு மணிக்கு ஆஃபிஸில் இருந்து புறப்பட்டு தேனாம்பேட்டயில் வண்டி ஒரு மணி நேரம் நிக்க எப்படியோ ஒன்பதரை மணிக்கு சைதாப்பேட்டை பிரிட்ஜ்க்கு அந்த சைடு உள்ள அந்த குறுக்கு சந்தை வந்தடைந்தது. இவரின் கருப்பு ஆடியின் கண்ணை துளைக்கும் விளக்கை தவிர தெருவில் வேறு விளக்கு இல்லை. அவர்கள் எதிரில் நின்ற லாட்ஜில் மட்டும் மூன்று நான்கு அறைகளில் மஞ்சள் தெரிந்தது.

"நீ இங்கயே வெயிட் பண்ணுயா. போலீஸ் கீலிஸ் வந்தா கால் போட்டு சொல்லு. முடிச்சிட்டு வந்துடறேன்" .

"சரி சார்".

.....

"சார்! நீங்க வேட்டைப்புலி டைரக்டர் தானே? சார் நீங்க போய் இங்க?" என்றான் வரவேற்பாளன்.

"மேனேஜர் எங்கய்யா? போய் வர சொல்லு"

"ஹலோ Mr. GKS. சொல்லுங்க சார். என்ன இந்த பக்கம்? Mrs. GKS , உங்களுக்கு  வயசாயிருச்சுனு ரூம் அ உட்டு தொரத்திட்டாங்களா ?" என்றான் மேனேஜர் ஆறுமுகம்.

"எனக்கு ரூபிணி வேணும் "

"அட என்ன சார். யாரோ உங்களுக்கு சொல்ட்டாங்கன்னு நீங்களும் ஒரு மாசமா கால் போட்டு கேக்கறீங்க. டிமாண்ட் பீஸ் சார் அது. வயசு 26 27 சொச்சம் தான். அவ கண்ணுல இருக்கற வசீகரம் இருக்கே. அப்பாடியோ. எனக்கே ஒரு சில நாள் பசி வந்திரும் சார். ஆனா நமக்கு தொழில் முக்கியம் ஆச்செ"

"கேட்டதுக்கு பதில் ?"

"கோடி கோடி யா சம்பாதிக்கிறீங்க. உங்களுக்கு எதுக்கு சார் இந்த மாரி செகண்ட் கிரேட் தர்ட் கிரேட் பார்ட்டி லாம்? இவங்க எல்லாம் உங்க படத்துல பேக் டான்சர்ஸ் அளவுக்குக் கூட ஒர்த் இல்லையே ?"

பையிலிருந்து புதிய இரண்டாயிரம் தாள்கள் ஒரு ஐந்தை எடுத்து செல்லோ டேப்பால் அந்த மேனேஜர் இன் வாயை ஒட்டினார். அவன் கையால் 556 என காட்டினான்.

பாழாய் போன அறை. கிழிந்த மெத்தையிலிருந்து பஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரத் தொடங்கின. ஒரே ஒரு விசிறி. அதுவும் எப்போது வேண்டுமானாலும் விழும் என்று ஒலிக்கிறது. சுவற்றில் ஒரு பெண் தன் இரு மார்பகத்தையும் பிடித்து கொண்டு மயக்கமாய் சிரிக்கிறாள். ஓவியத்தில். எண்ணெய் ஊற்றாத கதவு. பெயிண்ட் செய்யாத சுவர்கள். விந்து கழுவப்படாத தரை. ஆனால் ஒரு மணி நேரத்திற்க்கு 1500. ரூபிணி ஒருத்தி போதும் , எந்த வசதியும் வேண்டாம் என தேடி வரும் கும்பலால் இந்த நிலை. வேறு மாநிலங்களிலிருந்து கூட வர தயார். கிழிந்த மெத்தயின் ஓரமாய் அவள் , அவள் மீது பாய்ந்து , பருமனான ஒரு சொட்டை மண்டையன், லாவகமாய் மேய்ந்து கொண்டிருந்தான்.

"யோவ் ! வலிக்குதுய்யா" என அவள் அலற, அனேகமாக இன்று உடைந்து விடும் என்பது போல கட்டில் ஆடியது.

"என்னடி சவுண்ட் உட்ற". பளாரென உட்டதில் மும்பை நடிகையின் முகம் போன்றிருக்கும் மிருதுவான சருமத்தை சிவக்க வைத்தான்.

"யோவ் கெளம்புயா. ஒரு மணிநேரம் ஆச்சு" என மேனேஜர் ஓடி வந்து தொரத்தினான். "சார் ! போங்க சார் .கொஞ்சம் அட்ஜஸ்ட் பணிக்கங்க சார். டேய் இந்த கருமத்தை தொடடா"

"ரூபி! சீக்கிரம் ரெடி ஆய்ட்டு சார் அ பாத்துக்கோ"

மெதுவாக தயக்கமாக GKS உள்ளே சென்றார். கதவு தாழ் போட பட்டது. ரூபி அவசரமாய்ப்  போட்ட ஜாக்கெட்டின் ஊக்கை திரும்ப கழட்ட முனைந்தாள். "இரு இரு ..வேண்டாம். என் பொஞ்சாதிக்கு தெரிஞ்சா மூச்சு விட்டுடுவா"

"அயியா செரியா போச்சுடா. அப்பறம் எதுக்கு சார் இங்க வந்தீரு?"

"உங்கிட்ட பேசணும். உன்னோட அப்பன எனக்கு நல்லா தெரியும். நானும் அவனும் ஒண்ணா தான் படிச்சோம்"

"இன்ன சார் எதோ உளறுற. அவன் வெந்து 5 வருசம் ஆச்சுய்யா "

"தெரியும்"

"எங்க அவன் பேர சொல்லு பாப்போம் ?"

"கண்ணய்யா. உங்க ஆத்தா பேரு ராசம்மா. நீ அவுங்களுக்கு ஒரே பொண்ணு."

"இன்னாயா! எதோ என் கண்ணுலேந்து என்னப் பத்தி பாத்தா மாரியே சொல்ற"

"சொல்றேன் ல. எனக்கு தெரியும்"

"சரி. இப்ப இன்னா வேணும் உனக்கு ?"

"உனக்கு ஒத்தாச பண்ண தான் வந்துருக்கேன்"

"இன்னாயா சொல்ற ?"

"நா சில வினா கேக்கறேன். நீ உண்மைய சொல்லு. போதும்"

"இன்னா கேக்க போற ? எதுக்கு இந்த தொழில் வந்தானு கேக்க போற ? அசிங்கமா இல்லையாடி தாசி மவளேன்ப. எலாம் கேட்டாச்சுயா "

"ஆமா. முதல் கேள்வி கேப்பேன். பதில் தேவ. ரெண்டாவது கேள்விக்கு பதில் தேவ இல்ல "

"எதுக்கு உனக்கு நா சொல்லணும் ?"

"ரூபி ?"அவள் இடுப்பில் இருந்த தழும்பை தொட்டான்

"யோவ் என்னையா? வேணாம் னு சொன்ன ?"

"அதில்ல! இது எப்படி ?"

"அதுவா. எவனோ ஒரு அரிப்பு எடுத்தவன் செஞ்சது"

"அடிப்பாங்களா ?"

"ஆமா யா. சில பேர்க்கு என்ன அடிச்சா தான் அவனுங்க ஆம்பளைங்கனு ஞாபகம் வருது போல. ஆனா வலில கதறுவேன். லொட்ஜ் ல ஒருத்தன் வர மாட்டான்"

"உனக்கு இங்க இருக்கறது புடிச்சிருக்கா ? "

"திரும்ப கேக்கறேன், உண்ட எதுக்கு சொல்லணும்?"

"உன் ஆத்தா அப்பன் உசுரோட இருந்த இப்டி விட்ருப்பாங்களா சொல்லு ?"

லேசாக பெருமூச்சு விட்டாள். இடது கண்ணோரமாக நீர் அவள் மை பூசப்பட்ட உதட்டை தேடியது.

"யோவ்!!"

"நீ சொல்லு? அவங்களுக்கு புடிச்சிருக்குமா? அத உடு. உனக்கு புடிச்சிருக்கா? "

கனத்த குரலுடன் அழுதாள். அழுவதில் வார்த்தைகள் முழுங்கப்பட்டு ,"இல்லையே. புடிக்கலையே! வேணும்னாங்க இந்த பொழப்ப நடத்தறோம்? 25 வயசுல ரெண்டு பெரும் பூட்டாங்க. பசிச்சிதே " என்றாள்

அருகில் சென்று GKS அவளை கட்டி அணைத்து கொண்டு "எல்லாம் செரி ஆய்டும் மா. உன்ன இங்கேந்து கூட்டு போக தான் வந்திருக்கேன்" என்றார். முதல் முறையாக அவளுக்கு அந்த அணைப்பில் காமம் தெரியவில்லை. தனது ராசம்மா வை கட்டி அணைத்தது போல் ஒரு கதகதப்பு அவளுக்கு. அவரின் முழு சட்டையையும் ஈரமாக்கினாள்.

"நீ சொல்லு. அவங்களுக்கு என்னாச்சு?"

"அவிங்க பாவம் யா. அப்பனுக்கு பெருங்கடன். நெலம் எல்லா வத்தி போச்சு. எல்லாத்தையும் வித்து சென்னைக்கு வந்தோம். தோ. இந்த சைதாபேட்ட பிரிட்ஜ்க்கு அடில தான் குடுச போட்டு இருந்தோம். ஆத்தா அப்பன் ரெண்டு பெரும் கூலிக்கு போயிருவாங்க. நா ஒக்காந்து பேங்க் எக்சாம்க்கு லாம் படிச்சினு இருந்தேன். எட்டாங்கிளாசிலயே இஸ்கூலு நிறுத்திப்புட்டாங்கல்ல? அதனால செரமமா இருந்துது. எனக்கு எங்க தெரியும்? இப்படிலாம் நடக்கும்னு. மலயா நம்புன மாமன் மவனும் கட்டல. படிப்பும் ஏரல. அதனால எதோ இப்பவாச்சு எத பண்ணுவோமேன்னு துர்கா அக்கா ஆன்ட இந்த புக் அ வாங்கி படிப்பேன். அந்த அக்கா தான் சொல்லும், கிளெர்க் வேல நமக்குலாம் கிடைக்கும்னு. அப்போதான் ஒரு நாள் போலீஸு ரெண்டு மூணு பெரு வந்து எங்கப்பன இஸ்துக்குனு போனானுங்க. எதுக்குனே சொல்லல. நானும் ஆத்தாளும் அழுவராம்யா. ஓடி டேசனுக்கு போனா, அவன் கஞ்சா விதுர்க்கான். அப்பன அடி அடி னு அடிச்சு 6 மாசம் வெச்சுக்குனான். எங்கப்பன் மெயின் டீலர் பேர சொன்னாப்ல தான் உட்டானுங்கோ. இந்த மேட்டர் தெரிஞ்சு எங்க ஆத்தாளையும் வேலைலேந்து தொரத்திட்டானுங்கோ. சேரி இன்ன பண்றதுனு வேல தேட அரமிச்சேன். 25 வயசு. படிப்பில்ல. ஆனா மூஞ்சி மட்டும் கலையா இருக்கும். கீஞ்ச சீலையா இருந்தாலும் எடுப்ப கட்னு போவேன். எங்க வேல தேடி போனாலும் தப்பா கை வெப்பானுங்கோ. நா எதாச்சு திட்டினு வந்துருவேன். அப்படி ஒரு நாள் வேல தேடி முடிச்சிட்டு வீட்டுக்கு வரும் போது எங்க குடிசை சுத்தி எல்லாம் கூட்டம்..அங்க !!...   "  இம்முறை கண்களிருந்து காவேரி. வேண்டாம். வத்தி போச்சு. தண்ணியே இல்ல. நமக்கு சொந்தமும் இல்ல. கங்கா வெச்சுப்போம். ரூபிணி கண்களில் கங்கா.

"என்னாச்சு ரூபி. பரவாலம்மா சொல்லு "

"கொளுத்திக்குடாங்கய்யா! என்ன தனியா விட்டுட்டு போய்ட்டாங்கய்யா" என அவரை கைக்குழந்தை போல் கட்டி அணைத்து கொண்டாள் வெள்ளந்தியாக.

"அப்பறம் ?"

"அப்பறம் என்ன? வேற குடிசை பாக்க கூட கைல காசில்ல. அப்போ திடீர்னு ஆறுமுகம் சார் ஞாபகம் வந்தாரு. அவரு அப்போவே இந்த தொழிலுக்குக்  கூப்டாரு. நா அப்போ அவர நாக்க புடுங்கற மாறி கேட்டேன். நெலமைய பாத்தியா? பசி நம்மள எப்படியெல்லாம் பன்னுதுன்னு? துர்க்கா அக்கா கிறுக்கா அக்கானு எவளும் வரல. சொந்தம்னு ஒரு பய வரல. அடுத்த வேல கஞ்சிக்கு ஆனா போதும்னு வந்துட்டேன். வந்து இவர் காலுல ஊண்டேன் "

"இங்க என்னலாம் அனுபவிக்கிற? என்னலாம் கஷ்டபட்ற?"

"அனுபவிக்கிறேனா ? வலில செத்துனு கெடக்கேன். ஒரு 2 வருசம் கழிச்சி கைல சில்ர மிஞ்சிச்சு. நான் வேற பொழப்ப பாத்துக்க போறேன்னு இவர்ட சொன்னேன். வயித்திலேயே மிதிச்சான். என்னால தான் இது ஓடுதாம். ஆனா எனக்கு மாசத்துக்கு பத்தாயிரம் மேல ஒரு பைசா தர மாட்டான். அந்த செலவு ல தான் நா மாத்தர சோறு தனி எல்லாத்தையும் பாத்துக்கறேன்."

"உன் உடம்புல இருக்கற காயத்தலாம் காட்டு? "

காட்டினாள். ஒவ்வொரு புண்ணும் இவரது கை தழுவலிற்கு ஆளானது.

"நிஜமா என்ன கூட்டினு போகவா வந்துருக்க? "

"ஆமா. நெஜமா. ஆனா இன்னிக்கு இல்ல. ஒரு மாசம் பொறுத்துக்கோ. எனக்காக "

"யாருமே என்னாண்ட இவ்ளோ அன்பா பேசுனதில்லயா. எல்லார்க்கும் அடிச்சு காய படுத்த தான் தெரிஞ்சுது. நீ இன்னிக்கு பேசுனது எல்லாம் காயத்துக்கு மருந்து போட்டா மாரி இன்ச்சு..மறக்காம என்ன வந்து இத்துணு போவ ல?"

"நெஜமா" , மெல்ல GKS அவளை அணைத்தான். வண்ண வண்ண பூ போட்ட போர்வைக்குள் சென்றார்கள். மெல்ல அவள் அவன் அருகில் சென்றாள். தன் ஜாக்கெட் கொக்கி ஓடு தொடங்கி அவர் பாண்ட் ஜிப் ஓடு முடித்தாள். கோடி முத்தங்கள் வாங்கிய உதட்டால் முதல் முறையாக முத்தம் கொடுக்க பட்டது. அந்த முத்தத்திற்கு ஏதோ ஒரு பெயர். நம்பிக்கையோ காதலோ சோகமோ விடுதலையோ எதுவென அந்த இருள் மனதிற்கு விளங்கவில்லை. அவள் அந்த அறையில் முதல் முறையாக சிரித்தாள். முத்தங்களும் சிரிப்பும் வாங்கும் இடத்திலிருந்து மட்டுமே பார்த்த அவளுக்கு எதோ ஒரு அதீத உணர்வு பூண்டது.

"பங்களா வெச்சுக்க தானே ?"

"ஆமா". கண்களில் முத்தமிட்டான்

"பெருசா ?"

"ஹ்ம்ம் ". கழுத்து

"ஒரு மாசம் கழிச்சு அங்க தானே ?"

"இல்ல வேறொரு வீடு ". உதடுகள்

சிரித்தாள். குலுங்கிக் கொண்டு சிரித்தாள். முதல் முறையாக அந்த அறையில் இரு நிர்வாண சிரிப்பழகிகள் ஒன்று சேர்ந்தனர்.

.....

ஒரு மாசம் கடந்தது. ரூபி அன்று தன்னிடம் இருந்த மிக சிறந்த சேலையை கட்டி இருந்தால். முகம் பளிச்சென்று காட்சி அளித்தது. ஒரு மாத காலத்தை வெற்றிகரமாக கடந்த மகிழ்ச்சி அது. புது விடியலுக்கான, மரு வாழ்வுக்கான ஆயத்தம் அது. காலை 5 மணிக்கெல்லாம் எழுந்த GKS சூடான காப்பி தோசைக்கு பிறகு எட்டரை மணிக்கு டிப் டாப் ஆக செயின்ட் லோரன்ட் சூட் அணிந்ததில் 40 வயதை போல் காட்சி அளித்தார். பாண்டியை கூப்பிட்டு கார் ஐ ஸ்டார்ட் செய்ய சொன்னார். தி நகரில் உள்ள தன வீட்டிலிருந்து புறப்பட்டு கார் அண்ணா சாலையில் நின்று ஒருவரை ஏத்திக்கொண்டது. சைதாப்பேட்டை பிரிட்ஜ் ஐ கடந்து கார் வேளச்சேரியை ....

"எஸ்ட்ரொர்டினரி சார். பிண்ணிடீங்க. ரூபிணி ஆ நடிச்ச பொண்ணுக்கு கண்டிப்பா நேஷனல் அவார்ட் தான்"

"அப்போ எனக்கு ?". சிரித்தார்.

"உங்களுக்கும் கண்டிப்பா. இந்த பிரிவியூ வெச்சு சொல்றேன். இத கண்டிப்பா கேன்ஸ் பிலிம் விழாவிற்கு அனுப்பலாம்"

"அதுக்கு தானே யா உன்ன கூப்ட்ருக்கேன். ஆகர வேலைய பாரு. நா மத்த ஜாம்பவான்கள சந்திச்சிட்டு வரேன்"

திரையுலக பிரபலங்கள் அனைவரும் GKS க்கு புகழாரம் சூட்டினர். கண்டிப்பாக பல விருதுகள் வாங்கும் என நம்பிக்கை ஊட்டினர். ஜூரி யிலிருந்து ஒருவர், "Mr.GKS , இதுவர விபச்சாரத்தின் அடிநாதத்த இவளோ அழகா யாருமே காட்ல சார். உங்களால வேட்டைப்புலி போல மசாலா படம் மட்டும் தான் எடுக்க முடியும்னு நெனச்சவங்களுக்கு மூஞ்சி இருக்காது நாளைக்கு ".சிரித்தார் GKS.

நாட்கள் ஒன்று ..ரெண்டு ..மூன்று ஆகின. எல்லா திரை அரங்குகளிலும் "ரூபிணி" சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. சைதாப்பேட்டை ராஜ் தேட்டரில் GKS மக்களோடு மக்களாக இரவு காட்சியை கண்டு நெகிழ்ந்து கொண்டிருந்தார். அங்கேந்து 500 அடியில் ஒரு குறுக்கு தெருவில் ஒரு லாட்ஜில் 556 ஆவது அறையில் கட்டில் வேகமாக ஆடிக்  கொண்டிருந்தது. சுவற்றில் நிர்வாண பெண் சிரித்து கொண்டிருந்தாள். வலி மறத்து போன முகத்துடன் 28 வயதான ஒரு பெண் அந்த எண்ணெய் போடாத கதவையே பார்த்து கொண்டிருந்தாள். ஏக்கத்தோடு நம்பிக்கையோடு ..காதலோடு...



                                                                                                                           - ஷ்ரவன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"அயி கிரி நந்தினி !"

உரிமை